இந்தியா

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இளைஞர் கைது.. ஏகே 47 துப்பாக்கி பறிமுதல்

இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து, பாகிஸ்தானுடன் இணைப்பதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாக பார்க்கப்படுகிறது.

குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது ஷாரூல் இஸ்லாம் கபிருதீன் என்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து, பாகிஸ்தானுடன் இணைப்பதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து 2001 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் மற்றும் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியது.

இதைத்தொடர்ந்து 2016 பதான்கோட் விமானப்படை தாக்குதல் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள ஜரோட் பேருந்து நிலையம் அருகே பயங்கரவாத தடுப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாகனத்தில் சென்ற சந்தேகத்திற்கிடமான 22 வயது இளைஞர் முகமது ஷாருல் இஸ்லாம் கபிருதீன் என்பவரிடம் போலீசார் சோதனை நடத்திய போது, அவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவரிடமிருந்து ஏகே 47 ரக தானியங்கி துப்பாக்கி, இரண்டு காலி தோட்டாக்கள், 23 தோட்டாக்கள், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த கொடி, சிம் கார்டுகள் மற்றும் இரண்டு கைபேசிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து அவரது வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்த போலீசார், பயங்கரவாத குழுக்களுடன் இளைஞர் உரையாடி வந்ததை கண்டறிந்தனர்.

மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த முஃப்தி ரஃபிக் (எ) இப்னு அப்துல்லா என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT