தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் காலை 11.30 மணி அளவில், டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்துக்கு நேற்று சென்றடைந்தார். பின் மாலை 5.30 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு கடமை இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒனறாகும். சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது இரு மாநிலங்களின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. குதிரை பேரம் நடப்பதாக தொடக்கத்திலேயே புகார்கள் கூறப்பட்டு வந்தன. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இது தொடர்பாக கவர்னரிடம் புகார் அளித்திருந்தார்.
தற்போது தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து கவர்னர் ஆர்.வி. அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதான அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சமர்ப்பிக்கப் பட்ட கோப்புகளை விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவும் கவர்னர் பேசியதாக தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.