வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லியில் சில தினங்களுக்கு முன் சி.ஜே.பி. (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, 'வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்' என மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அவரது இந்த உறுதிமொழியின்படி, அரசு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், "தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026", மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிமுகம் -பரிசீலனை-நிறைவேற்றம் ஆகிய அலுவல்களுக்காக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக செய்வதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டன.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.