டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளை விலைக்கு வாங்கி கடத்திச் சென்ற ஒரு பெரும் கும்பலை உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசியாபாத்தின் துரோனிகா சிட்டி பகுதியைச் சேர்ந்த ஹீனா என்ற பெண்ணிற்கு கடந்த மே 23 அன்று பெண் குழந்தை பிறந்தது. ஹீனாவின் குடும்ப வறுமையைப் பயன்படுத்திய அவரது உறவினரான ரபியா மற்றும் பூஜா என்ற பெண், குழந்தையை விற்குமாறு வற்புறுத்தியுள்ளனர். முதலில் சம்மதித்த ஹீனா, குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாசத்தால் குழந்தையை விற்க மறுத்துவிட்டார்.
ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு அந்தக் குழந்தையை விற்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த மனோஜ் என்பவனின் தூண்டுதலால், மே 26 அன்று 11 நாட்களேயான அந்தப் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. இதுகுறித்து தாய் ஹீனா அளித்த புகாரின் பேரில், போலீஸார் சிசிடிவி மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் 2 அன்று குழந்தையை பத்திரமாக மீட்டதோடு, முதற்கட்டமாக 13 பேரைக் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் மேலும் 3 முக்கியக் குற்றவாளிகள் தரன்னும், கருணா, அனில் லக்டா கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த நெட்வொர்க் குறித்துப் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள மிகவும் ஏழையான, கூலி வேலை செய்யும் கர்ப்பிணிப் பெண்களை இந்தக் கும்பல் தனது ஏஜெண்டுகள் மூலம் கண்காணித்து வந்துள்ளது.
குழந்தையில்லா பணக்காரத் தம்பதிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் பல லட்ச ரூபாய்க்கு இந்தக் குழந்தைகளை விற்றுள்ளனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே இவர்களது முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
குழந்தைகளைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் வாட்ஸ்அப் மூலமே பகிரப்பட்டுள்ளன. போலீஸாரிடம் சிக்காமல் இருக்க, ஒவ்வொரு டீல் முடிந்தவுடனும் சாட்களை முழுமையாக அழித்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த கும்பலின் மிக மோசமான அம்சம் என்னவென்றால், குழந்தையைப் பெற்றெடுக்கும் ஏழைத் பெற்றோரிடம் பேசப்பட்ட தொகையைக் கொடுக்கும்போது, அசல் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து கொடுத்து ஏமாற்றிவிட்டு, குழந்தையுடன் தப்பி விடுவர். "பெற்றோர்கள் தங்களுக்குக் கிடைத்தது கள்ள நோட்டுகள் என்பதை அறிவதற்குள் இந்தக் கும்பல் குழந்தையோடு தலைமறைவாகிவிடும்.
மேலும், குழந்தையை பணத்திற்கு விற்றதால் தாங்களும் சட்டப்படி சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் ஏழைப் பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதை இந்தக் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது."
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 மொபைல் போன்களும், கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுக்குப் பின்னணியில் இருக்கும் பிற நபர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இதில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.