கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து 
இந்தியா

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைய கடினமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் 5 மாடி ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு

இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது.

தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த கட்டிடத்திற்குள் பல ஹோட்டல்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும்.

கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஹோட்டலின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது.

விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

சிக்கியவர்களை மீட்பதும், தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிவதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.

கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கி உள்ளது” என்று கூறினார்.