புற்றுநோயால் தாயை இழந்த இளைஞர் ஒருவர் தனது 80 வயது தந்தையை முதன்முதலாக விமானத்தில் ஏற்றி பயணம் செய்த நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீகாந்த் பாண்டே என்பவர் முன்னதாக ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் அவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அப்போது அவரின் 80 வயது தந்தை பராமரிக்க ஆளில்லாமல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதன்காரணமாக தனது வேலையை விட்ட இளைஞர், தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தார்.
பிறகு வாழ்க்கை மிக குறுகியது என்று உணர்ந்த அவர், தான் நேசிக்கும் நபர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அப்போது அவரின் 80 வயதான தந்தை விமானத்தில் பயணம் செய்ததில்லை என்பதை உணர்ந்தார்.
இதையடுத்து அவர் தனது தந்தையை விமானத்தில் ஏற்றி அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பினார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் தனது தந்தையை விமானத்திற்கு அழைத்து சென்றார்.
இதனை தனது கேமராவில் பதிவு செய்த அவர், இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டார். மேலும் அந்த பதிவில், தந்தையின் முதல் விமான பயணம் என்று குறிப்பிட்டார்.
இளைஞரின் தந்தை விமானத்தின் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொண்டு காட்சிகளை பார்த்து ரசிப்பது சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், என் பெற்றோரை விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற அதே கனவு தனக்கும் இருப்பதாக பதிவிட்டார்.
மேலும் இந்த இளைஞரை போன்ற ஒரு மகனை காண்பதோ அல்லது வளர்ப்பதோ அரிது என்றும் பதிவிட்டார்.
மற்றொரு பயனர், தந்தை மகன் உறவு எவ்வளவு இனிமையான பந்தம் என்று பதிவிட்டார். மேலும் இளைஞரின் தந்தை தனது 80-வது வயதிலும் விமான ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவதை குறிப்பிட்டும் வாழ்த்து தெரிவித்தார்.