அருணாச்சல பிரதேசத்திற்குள் சீன ராணுவம் ஊடுருவிவிட்டதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் பகிர்ந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்ததற்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். ஒன்றில், சீன வாகனங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
மற்றொன்றில், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இந்திய ராணுவத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வீடியோக்களும் முற்றிலும் போலியானவை என்று இந்திய ராணுவம் ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.
முதல் வீடியோவில் சிக்கிமில் உள்ள 'நாது லா' கணவாய் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லை வர்த்தகத்திற்காக வந்த சீன வணிக வாகனங்களின் காட்சியாகும். இது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறியுள்ளது.
இரண்டாவது வீடியோவில் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போன்ற வீடியோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 'டீப்ஃபேக்' போலி வீடியோ ஆகும். அக்டோபர் 2023-ல் ஜம்மு காஷ்மீரில் எல்லையோர ஊடுருவல் தொடர்பாக அவர் அளித்த பேட்டியை மாற்றி எடிட் செய்து, அருணாச்சல பிரதேசம் பற்றி அவர் பேசியது போல ஜோடித்துள்ளனர் என்று ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்பியுமான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். "இந்திய ராணுவத்தின் நற்பெயரைக் கெடுக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்களைப் பரப்பியதற்காக காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது நாட்டின் எதிரிகளின் செயலுக்கு இணையான துரோகச் செயலாகும்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவனும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்திய ஆயுதப் படைகளை சிறுமைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த வீடியோ போலியானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், அதில் கூறப்பட்டுள்ள கருத்து உண்மைதான் என்று NSUI அமைப்பின் தலைவர் வினோத் ஜாகர் வாதிட்டுள்ளார். டெல்லியில் இளைஞர் போராட்டங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பை, ஏன் சீனா ஆக்கிரமிப்பதாகக் கூறப்படும் அருணாச்சல எல்லைக்கு அனுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு தொடர்பான இந்த போலி வீடியோ விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.