இந்தியா

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

சட்ட பயம், விழிப்புணர்வு இன்மையால் முதியவர்களே சைபர் கும்பலின் முக்கிய இலக்கு என நிபுணர்கள் எச்சரிக்கை

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் பார்தோலி நகரைச் சேர்ந்தவர் பிரபுபாய் படேல் (82). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று மிசிசிப்பி மாகாணத்தில் குடியேறினார்.

அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியுடன் பார்தோலி நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களது மூன்று பிள்ளைகளும் தற்போது அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பிரபுபாய் படேலின் வாட்ஸ்அப் எண்ணிற்கு "மும்பை காவல்துறை தலைமையகம்" என்ற பெயரில் ஒரு செய்தி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதே எண்ணில் இருந்து ஒரு அழைப்பும் வந்துள்ளது.

ரூ.122 கோடி மோசடி புகார் என மிரட்டல்

அழைப்பில் பேசிய ஒரு பெண், தான் மும்பை காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரபுபாயின் ஆதார் விபரங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ரூ.122 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி பிரபுபாயை மிரட்டியுள்ளார்.

மேலும், அவர் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் சைபர் குற்றவாளிகள் பயமுறுத்தியுள்ளனர்.

காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பின்னர், மற்றொரு நபர் தன்னை மும்பை உயர்காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு, "வழக்கில் இருந்து தப்பிக்க உடனடியாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள்.

விசாரணை முடிந்ததும் இந்த பணம் உங்களுக்கே திருப்பித் தரப்படும்" என்று நம்பும்படி பேசியுள்ளார்.

11 நாட்களில் ரூ.2.96 கோடி பரிமாற்றம்

பயந்துபோன பிரபுபாய் படேல், மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 11 நாட்களில் மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பிரபுபாய் அமெரிக்காவில் இருக்கும் தனது மகன்களிடம் இந்த விபரங்களை போனில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மகன்கள், இது சைபர் மோசடி என்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகுமாறு தந்தைக்கு அறிவுறுத்தினர்.

தீவிர விசாரணையில் சைபர் கிரைம் போலீஸ்

பார்தோலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வி.ஏ. செங்கல் தலைமையிலான போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சைபர் கிரைம் சிறப்புப் பிரிவினரும் இந்த விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சைபர் நிபுணர்களின் எச்சரிக்கை

இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு நிபுணர் பேராசிரியர் திரிவேணி சிங் கூறுகையில்:

"சட்ட அமலாக்க அமைப்புகளின் மீதான பயம் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் முதியவர்களே இவர்களின் முக்கிய இலக்காக மாறுகிறார்கள்.

எந்தவொரு அரசு அல்லது காவல் துறையும் போன் மூலம் யாரையும் கைது செய்யாது, விசாரணையின் பெயரில் பணத்தையும் கோராது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்." என்று கூறினார்.