இந்தியா

பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பா.ஜ.க.வைச் சேர்ந்த நிதின் நபின் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்.

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம்தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.