நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது.
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் அந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்க தொடங்கப்பட்டுள்ள E20 ஜனதா கட்சி, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
தங்கள் அமைப்பை ஒரு 'அரசியல்சாரா நுகர்வோர் உரிமை இயக்கம்' என்று குறிப்பிடும் E20 ஜனதா கட்சியினர், E20 பெட்ரோலை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என கோரவில்லை.
மாறாக 100% தூய்மையான பெட்ரோலும் பங்குகளில் கிடைக்க வேண்டும் என்றும் எதை தேர்ந்தெடுக்க வேண்டு வாகன உரிமையாளர்களே தீமானிக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மேலும் எத்தனால் கலப்பால் வாகனத்தின் மைலேஜ், என்ஜின் செயல்திறன் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வுகளை நடத்த வேண்டும் அரசு தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இலக்கு வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Cian Agro என்ற நிறுவனத்தை நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி நடத்தி வருகிறார்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கை அமலுக்கு வந்தபோது, வெறும் ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலால் என்ஜின்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் டாக்ஸி சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதன் காரணமாக, 'டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம்' சார்பில் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
E20 பெட்ரோலால் வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான சான்றுகளும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஜூலை 22 அன்று மாநிலங்களவையில் பதிலளித்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது 3% முதல் 5% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.