‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!

‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!
Cockroach Janta Party
Published on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் எழுந்த இளைஞர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் பட்டாளம் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

கரப்பான்பூச்சி உதயமாகிய விதம்:

தலைமை நீதிபதியின் கருத்து:

நீதிமன்ற வாதத்தின் போது வேலை இல்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் "கரப்பான்பூச்சிகள்" என மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கூறி சர்ச்சை வெடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான 'அபிஜித் தீப்கே', 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எனும் இளைஞர் அமைப்பை மே 16 அன்று தொடங்கினார்.

கேள்வி எழுப்பிய இளைஞர்கள்:

"கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால் என்ன ஆகும்?" என்ற ஒற்றைக் கேள்வியோடு சமூக வலைதளங்களில் ஒன்றுதிரண்ட Gen Z இளைஞர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் தீவிர முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

சோனம் வாங்சுக் இணைவும் 26 நாள் உண்ணாநோன்பும்:

இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல சமூக மற்றும் காலநிலை ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' ஜூன் 28 அன்று CJP அமைப்பின் மேடையில் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு இருந்தார். அவரது உடல்நிலை நலிவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணாநோன்பைத் தொடர்ந்தார். இதனால் மாணவர் போராட்டம் இந்திய அளவில் பூதாகரமாகி, உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, "நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது.

நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்." அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அபிஜித் தீப்கே:

CJP தலைவர் அபிஜித் தீப்கே "இது ஜனநாயகத்தின் வெற்றி! பயப்படாமல் எதிர்த்து நின்றால் அரசைப் பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடியவில்லை. நீட் முறைகேட்டால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் மற்றும் போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com