தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காகத்திய அரசர் கணபதி தேவா ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், மஹாராஜா மற்றும் ராஜாதிராஜலு என்று தெலுங்கு எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
தனியார் நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிமீறல் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த கோவில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், முறையான முன்னறிவிப்பு இன்றி, இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டித்து, கோவிலின் இடிபாடுகளுக்கு நடுவே அமர்ந்து பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த இடத்தை பார்வையிட்ட வாரங்கல் ஆட்சியர் சத்ய சாரதா மற்றும் நர்சம்பேட்டை அமைச்சர் தொந்தி மாதவ ரெட்டி, மீண்டும் இந்த இடத்தில் கோவில் கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.