டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி 
இந்தியா

கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.

ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி ஆர்டர் செய்த கிராபிக்ஸ் கார்டுக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு ரூ.30,000 வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்று மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறி வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, டெலிவரி ஆவது மற்றோரோன்றாக இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் ரூ.1.98 லட்சம் மதிப்பில் கணினிக்கான கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்த நபருக்கு, 1 கிலோ துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வைரலானது.

அலைக்கழிப்பு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இகாமர்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக புகாரளித்தும், பலமுறை தொடர்பு கொண்டும் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், தனக்கு உரியப் பணத்தைத் திரும்பப் பெறவும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரியும் மேற்கு வங்க நுகர்வோர் ஆணையத்தை அணுகினார்.

நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே, வாடிக்கையாளரின் கணக்கில் ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.

ஆனால் தான் அடைந்த மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.

விசாரணை

வழக்கு விசாரணையின் போது, வாடிக்கையாளர் தரப்பில் ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன்ஷாட்கள், இன்வாய்ஸ் பில், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், டெலிவரி செய்யப்பட்ட டிடர்ஜென்ட் பாக்கெட்டின் புகைப்படங்கள் மற்றும் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் ஆவணங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

எதிர்மனுதாரர்களான இ காமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் நோட்டீஸ் வழங்கிய பிறகும் ஆஜராகவில்லை.

ஆணையம் உத்தரவு

விசாரணையின்போது, "வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகே முழு தொகையும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறுதலான பொருள் அனுப்பப்பட்டது உண்மைதான் என்பது நிரூபணமாகிறது.

பணத்தைத் திரும்பப் பெற வாடிக்கையாளர் பலமுறை அலையவைக்கப்பட்டுள்ளார். பெரும் தொகையைச் செலுத்திவிட்டுப் பொருளும் கிடைக்காமல் அலையவிடப்பட்டது அவருக்குக் கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என ஆணையம் தெரிவித்தது.

பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதால் தனியாக ரீபண்ட் உத்தரவு தேவையில்லை என்று குறிப்பிட்ட ஆணையம், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை இழப்பீடாக ரூ.15,000 என மொத்தம் ரூ.30,000 தொகையை இகாமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் இணைந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்: 1915 எண்ணுக்கு டயல் செய்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

SCROLL FOR NEXT