ஆன்லைன் ஷாப்பிங் - ஆண்களைவிட 42 சதவீதம் அதிக நேரம் செலவிடும் பெண்கள்

தனிப்பட்ட முறையில் செல்போன் பயன்பாடும் 53.9 சதவீதத்தில் இருந்து 63.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங் - ஆண்களைவிட 42 சதவீதம் அதிக நேரம் செலவிடும் பெண்கள்
Published on

இந்தியாவில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இணையதளத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக 'நீல்சன்' மற்றும் 'இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம்' ஆகியவற்றின் ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது.

அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் சுமார் 91 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதனை பாலின விகிதத்தில் பார்க்கும்போது ஆண்கள் 52 சதவீதமும், பெண்கள் 48 சதவீதமும் இணையதளத்தை பயன்படுத்துவதாகவும், இணையதளப் பயன்பாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக் கக்கூடிய பெண்கள் சில குறிப்பிட்ட தளங்களில் ஆண்களைவிட அதிகநேரம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நகர்ப்புற பெண்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு சராசரியாக 82.4 நிமிடங்கள் 'ரீல்ஸ்' வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு செயலிகளில் நேரத்தை செலவிடுவதாகவும், அதிலும் 25 முதல் 34 வயதுடைய பெண்கள் 86.3 நிமிடங்கள் நேரத்தை செலவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கும் செயலிகளில் பெருநகரங்களில் உள்ள பெண்கள் ஆண்களைவிட 42 சதவீதம் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தனியார் அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் ஆகும்.

இதேபோல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2023-24-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது.

பெண்களின் சுகாதாரம், நிதியாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டது. 715 மாவட்டங்களில் சுமார் 6.79 லட்சம் குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை-6 என்ற இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சுகாதாரம், ஊட்டச்சத்து, குடும்ப நலம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த ஆய்வில் நாட்டின் தாய்-சேய் நலன், ஊட்டச்சத்து, மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைக்கும் திறன் அனைத்தும் சீராக மேம்பட்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

சுகாதாரத்தை பொறுத்தவரை பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் மேம்பட்டு உள்ளது. 15 முதல் 24 வயது வரையிலான பெண்களில் மாதவிடாய் பாதுகாப்புக்கான சுகாதாரமான முறைகளின் பயன்பாடு 79.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த 2019-21 காலகட்டத்தில் 77.6 சதவீதமாக இருந்தது.

தேசிய இளம்பருவ சுகாதார திட்டத்துக்குள் அடங்கியுள்ள மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி இந்திய பொது மருந்துகள் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் கிடைக்கும் சுகாதாரப் பொருட்கள் போன்றவை மூலம் விழிப்புணர்வு, அணுகல் மற்றும் பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை பயன்படுத்துவதை மேம்படுத்தி உள்ளன.

பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்பட்ட 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் 41.8 சதவீதத்தில் இருந்து 50.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மேலும் 6 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளில் 95.6 சதவீதத்தினருக்கு தாய்ப்பால் கிடைப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டு இருந்தது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாக இருக்கும் (வளர்ச்சி குறைவு) நிலையின் அளவு, 35.5 சதவீதத்திலிருந்து 29.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது நீண்ட கால ஊட்டச்சத்து விளைவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.

மேலும் கடுமையான மெலிவு (உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு இல்லாமல் இருப்பது) 7.7 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக கணிசமாக குறைந்த அதே வேளையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 32.1 சதவீதத்தில் இருந்து 31.8 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளது.

இந்திய பெண்கள் ஒருமுறையாவது இணையதளத்தை பயன்படுத்திய விகிதம் 2019-21-ம் ஆண்டு கால கட்டத்தில் 33.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2023-24-ம் ஆண்டு காலகட்டத்தில் இரட்டிப்பாக அதாவது 64.3 சதவீதமாக அதிகரித்து இருந்தது.

தனிப்பட்ட முறையில் செல்போன் பயன்பாடும் 53.9 சதவீதத்தில் இருந்து 63.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இவ்வாறு பெண்களின் டிஜிட்டல் பயன்பாடும் அதிகரித்து இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதேபோல பெண்களின் வங்கி பயன்பாடு அல்லது சேமிப்பு கணக்குகளும் 78.6 சதவீதத்தில் (2019-21) இருந்து 89 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் சீரான முன்னேற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com