இந்தியா

போராட்டத்தின்போது போலீசார் உடல் கேமராக்களை பொறுத்த உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

போலீசார் சீருடையில் 'பாடி வார்ன்' கேமராக்களை அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போராட்டங்களின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் தங்களது சீருடையில் கேமராக்களைப் பொறுத்த வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் சம்பரே மற்றும் நீதிபதி அருண் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள்,

“சட்டம் இயற்றும்படி நாம் ஏன் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்? நீங்கள் எங்களைக் கையாளச் சொல்லும் இந்த விஷயம் தெளிவான ஒன்று. இதில் குழப்பமடைவதற்கோ அல்லது சந்தேகம் கொள்வதற்கோ எந்த இடமும் இல்லை.

எப்போதெல்லாம் தேவையோ அப்போது ஒரு சட்டத்தை இயற்றி அவற்றை இணைத்து தேவையான நடவடிக்கைகளை அரசு வழங்கியுள்ளது. அப்படியிருக்க, இதற்கு ஏன் ஒரு நீதிமன்ற உத்தரவு அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நாங்கள் டெல்லி காவல்துறையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த காவல்துறை அமைப்பைப் பற்றியும் கவலைப்படுகிறோம். இது நாம் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தும்.” என தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு உத்தரவு

இந்த விவகாரத்தில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்தாலும், இந்த மனுவை ஒரு கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு, இது குறித்து 6 மாத காலத்திற்குள் மத்திய அரசு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு வாதம்

டெல்லி ஜந்தர் மந்தர் போன்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களை வீடியோ பதிவு செய்வதற்கு ஏற்கனவே உரிய நடைமுறைகள் (SOP) செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞரும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான சேதன் சர்மா தெரிவித்தார்.

மனுதாரர் செயல்முறை வழிகாட்டுதலில் மேலும் மாற்றங்களைக் கோருவதால், அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒரு முறையீட்டைச் செய்யலாம் என்றும், அதனைப் பொருத்தமான தொழில்முறை அமைப்பு பரிசீலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி

ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறையினர் தரப்பில் அத்துமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களைத் தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க போலீசாருக்கு பாடி வோர்ன் கேமராக்களை கட்டாயமாக்க வேண்டும் என சாகத் ராகவ் என்பவர் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

SCROLL FOR NEXT