

பிரதமர் மோடியுடன் பெண் ஒருவர் இருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட ஏஐ புகைப்படத்தை 24 மணிநேரத்திற்குள் நீக்குமாறு மெட்டாவிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக அப்பெண் கூறியதை அடுத்து, அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கும் உத்தரவிட்டது.
தொடர்ந்து இதுதொடர்பாக கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா மற்றும் ரத்னா சிங் ஆகியோருக்கும் உயர் நீதின்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்தின் போது, அதன் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது புகைப்படம் ஒன்றை செயற்கை நுண்ணறிவு மூலம் தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகப் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பெண் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கோ அல்லது வைரலாகப் பரவிவரும் டீப்ஃபேக் புகைப்படங்களை உடனடியாக அகற்றுவதற்கோ அல்லது முடக்குவதற்கோ உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அப்பெண் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடக்கூறிய நீதிபதி, பின்னர் இந்த உணர்திறன் மிக்க விஷயத்தை கருத்தில்கொண்டு, இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மேற்குறிப்பிடப்பட்ட உத்தரவுகளுடன், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து அப்பெண்ணின் விவரங்களை நீக்கக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.