ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!

டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா?
ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!
Published on

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கு

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.

உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.

இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.

இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.

“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.

தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார்.

இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com