இந்தியா

'ஐக்யூ' ஜின்- ஓல்ட் மங்க் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தடை

பாட்டிலின் வடிவம், கருப்பு-வெள்ளை நிறத் திட்டம், கருப்பு மூடி மற்றும் லேபிள் அமைப்பைப் பிரதிவாதி நகலெடுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

'கிரேட்டர் தன்' ஜின் பாட்டிலின் வடிவமைப்பைப் போலவே 'ஐக்யூ' (iQ) ஜின் பாட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு மோகன் மீக்கின் லிமிடெட் நிறுவனத்திற்கு டெதில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

'கிரேட்டர் தன்' ஜின் பாட்டிலின் தோற்றத்தைப் போலவே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் 'ஐக்யூ' (iQ) ஜின் பாட்டில்களைத் தயாரித்து அடைப்பதற்கு ஓல்ட் மங்க் தயாரிப்பாளர்களான மோகன் மீக்கின் லிமிடெட் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'ஐக்யூ' பயன்படுத்த தடையில்லை

மோகன் மீக்கின் லிமிடெட் நிறுவனம் ஜின் அல்லது பிற பொருட்களுக்காக 'IQ' என்ற பெயரையோ அல்லது 'iQ' சின்னத்தையோ பயன்படுத்துவதற்குத் தடையில்லை என்றும், வேறு விதமான தோற்றத்தில் தனது ஜின் மதுபானத்தை விற்க அந்த நிறுவனத்திற்கு உரிமை உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

'கிரேட்டர் தன்' ஜின் மதுபானத்தைத் தயாரித்து விற்கும் நாவோ ஸ்பிரிட்ஸ் அண்ட் பெவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களின் மீது எந்தத் தனிப்பட்ட உரிமையும் இல்லை என்று நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் தெரிவித்துள்ளார். மனுதாரரின் தோற்றத்தைப் போலக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் அந்த நிறங்களைப் பயன்படுத்த பிரதிவாதிக்கு உரிமை உண்டு என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

லேபிளில் மாற்றம் அவசியம்

நவம்பர் 26 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், புதிய வடிவமைப்பு பாட்டிலின் வடிவத்தில் மட்டுமல்லாமல், லேபிளின் அளவு மற்றும் அமைப்பு, வண்ணக் கலவை, சின்னத்தின் இடம், எழுத்துரு மற்றும் வார்த்தைகளின் அமைப்பு என ஒட்டுமொத்தத் தோற்றத்திலும் வேறுபட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கிரேட்டர் தன்' என்ற லண்டன் ட்ரை ஜின், இந்தியச் சந்தையில் உருவான முதல் உள்நாட்டுக் கைவினை ஜின் வகைகளில் ஒன்றாகும். பாட்டிலின் வடிவம், கருப்பு-வெள்ளை நிறத் திட்டம், கருப்பு மூடி மற்றும் லேபிள் அமைப்பைப் பிரதிவாதி நகலெடுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஸ்டாக் விவரம்

160 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானத் துறையில் இயங்கி வரும் மோகன் மீக்கின் நிறுவனம், 1996-ஆம் ஆண்டிலிருந்தே பீருக்காக 'IQ' என்ற பெயரைப் பயன்படுத்தி வருவதாகவும், ஆகஸ்ட் 2023-இல் 'iQ' லேபிளின் கீழ் ஜின் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், சர்ச்சைக்குரிய இந்தத் தோற்றத்தால் நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் குழப்பமும் ஏமாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது என நீதிமன்றம் கருதியது.

வழக்கு முடியும் வரை தற்போதைய தோற்றத்தில் ஜின் தயாரிக்கவோ, பாட்டில்களில் அடைக்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் கையிருப்பு விவரங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒரு மாத கால அவகாசத்திற்குள் தற்போதைய கையிருப்பை விற்று முடித்துவிட்டு, சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளிலிருந்து அவற்றை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT