இந்தியா

டெல்லி - டேராடூன் விரைவுச்சாலை: 3 மாதத்தில் விழுந்த பள்ளம்... ரூ.12 ஆயிரம் கோடியின் தரம்?

ரூ.650 சுங்கவரி செலுத்தினாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

டெல்லியில் ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, ஏப்ரலில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெல்லி-டேராடூன் ஆறுவழி விரைவுச்சாலையில் இரண்டு திடீர் பள்ளங்கள் விழுந்திருப்பது அதிர்ச்சியையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

பயன்பாட்டிற்கு வந்து முழுதாக மூன்று மாதங்கள் கூட ஆகாதநிலையில், ஒரு பருவமழையைக்கூட சந்திக்காத நிலையில், சாலையின் நடுவே பள்ளங்கள் விழுந்துள்ளது, 5 வருடங்களாக போடப்பட்ட சாலையின் தரம், பணியில் நடந்துள்ள ஊழல் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த பள்ளம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக, பயனர்கள் பலரும் பல்வேறு விவகாரங்களை ஒப்பிட்டு கேள்விகளை முன்வைக்கின்றனர்.

E20 எரிபொருள் குறித்த சர்ச்சையைக் குறிப்பிட்டு, “20% எத்தனால் கலந்த பெட்ரோலை ரூ.110-க்கு வாங்கும்போது, ​​ரூ.650 சுங்க வரி செலுத்துவதைக் கற்பனை செய்து பாருங்கள்; ஆனாலும், உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஊழலுக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ஒவ்வொரு துறையிலும் பகிரங்கமான கொள்ளை நடக்கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி-டேராடூன் விரைவுச்சாலை

டெல்லி-டேராடூன் விரைவுச்சாலை என்பது வட இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். சாலையின் மொத்த நீளம் 210 கி.மீ. திட்ட மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி. டெல்லியின் அக்‌ஷர்தாம் கோயிலில் தொடங்கி உ.பி எல்லையான பக்பத் வரை செல்கிறது.

இதில் டெல்லி நகருக்குள் மட்டும் 14.75 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும் என்ற நிலையில், 5 சுங்கச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

இது பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான பயண நேரம் 6 மணிநேரத்திலிருந்து 2.5 மணிநேரமாகக் குறைந்துள்ளது. சாலையின் ஈர்ப்புப் பகுதியாக ராஜாஜி தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் 12 கி.மீ பகுதி அமைகிறது. இது ஆசியாவின் மிக நீளமான உயர்மட்ட வனவிலங்கு வழித்தடமாக அமைகிறது.