உமர் காலித், சர்ஜில் இமாம் 
இந்தியா

விசாரணையின்றி சிறையில் 6 ஆண்டுகள்.. உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

இவ்வளவு காலம் விசாரணையின்றிச் சிறையில் வைத்திருப்பது தங்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்

2020 டெல்லி கலவரத்தை தூண்டிய வழக்கில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் இருவரின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

அவர்கள் தாக்கல் ஜாமீன் மனுக்களை டெல்லி கர்கர்டூமா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விசாரணையின்றி ஆறு ஆண்டுகள்

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தங்களது மனுக்களில், இன்னும் இந்த வழக்கின் முறையான விசாரணை தொடங்கப்படாமலேயே தாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், "விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு மாத காலக்கெடு முடிவடைந்த போதிலும், வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

இவ்வளவு காலம் விசாரணையின்றிச் சிறையில் வைத்திருப்பது தங்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கலவரம்

கடந்த 2020 பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களின் போது பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று கூறி டெல்லி போலீசார் பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபாவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கலவரத்தைத் தூண்டியதாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது முக்கியச் சாட்சிகளின் விசாரணை முடிந்த பிறகு, அவர்கள் மீண்டும் ஜாமீனுக்காகக் கீழ் நீதிமன்றத்தை அணுகலாம் என்று வாய்ப்பை வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில், அவர்கள் கடந்த ஜூன் மாதம் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தள்ளுபடி

இருப்பினும், தற்போதைய ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த கர்கர்டூமா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய்,

"முந்தைய தீர்ப்புகள் தொடர்பான சில முக்கிய சட்டக் கூறுகள் மற்றும் அம்சங்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனையில் உள்ளன.

எனவே, இந்தச் சூழ்நிலையில் இந்த ஜாமீன் மனுக்களை தற்போதைய நிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது" என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT