கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கேரளாவின் மிக நீளமான இரட்டைச் சுரங்கப்பாதை சாலை திட்டப் பணிகள் கல்லாடி பகுதியில் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மிகக் கடுமையான மழை காரணமாக, இன்று அதிகாலை கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே திடீரெனப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதைக்காக வெட்டி குவிக்கப்பட்டிருந்த மண் குன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதற்கிடையே, சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவரும் என் சிந்தனையிலும் பிரார்த்தனையிலும் உள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கட்டான இச்சூழ்நிலையில், அனைத்து காங்கிரஸ் மற்றும் யுடிஎஃப் (UDF) தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டும்.
எதிர்கொள்ள முடியாத சவால்களைக் கூட வயநாடு முன்பு மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளது.
இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில், நிலச்சரிவில் சிக்கி தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். மாயமானவர்கள் மீட்கப்படும் வரை மன உறுதியுடன் இருக்கவும், அவர்களுக்காகக் காத்திருக்கும் அன்புக்குரியவர்கள் இந்த வேதனையான தருணத்தில் தைரியத்தைக் கடைப்பிடிக்கவும் பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.