டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடிபாடுகளிலிருந்து 9 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் 5 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தையும் நிலைமையையும் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இதுவரை 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களது முன்னுரிமை.
இந்தக் கட்டிடம் மிகவும் பழமையானது. அடித்தளத்தில்சில தோண்டும் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் காரணமாகத் தூண் ஒன்று சரிந்து மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது" என்றார்.
இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
விபத்து குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் டேனிஷ் அலி, "பாஜகவின் ஊழலால் டெல்லி மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
நேற்று தான் பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றார்.
ஆனால் அவர் நாட்டின் கல்வி முறை குறித்தோ அல்லது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தோ பேசவில்லை, மாறாக அரசியல் பேசி, கேள்வி கேட்பவர்களை 'திமாகி நக்சல்கள்' என அழைத்தார்.
பிரதமரே, இந்த நாட்டிற்கு நீங்கள் எத்தகைய ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.