

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரை ஒரு உயிரழப்பு பதிவாகியுள்ளது.
இடிபாடுகளிலிருந்து 6 முதல் 7 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீபகே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அபிஜித் தீபகே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நேற்று பிரதமர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து அரசியல் உரையாற்றினார். 'திமாகி நக்சல்' (அறிவுஜீவி நக்சல்) என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் விமர்சனம் செய்தார்.
ஆனால் நமது கல்வி உள்கட்டமைப்பின் நிலை குறித்து மிகக் குறைவாகவே பேசினார்.
இன்று தெற்கு வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து, மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப் போக்கிற்கு இந்த நாட்டின் மாணவர்கள் இன்னும் எவ்வளவு காலம் விலைகொடுக்க வேண்டும்?
பழங்குடியின பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் நாட்டின் தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
மாணவர்களுக்குப் பாதுகாப்பான வகுப்பறைகளும், பாதுகாப்பான விடுதிகளும், அடிப்படை கண்ணியமும் தேவை.
இது மிகவும் அதிகமான கோரிக்கையா? பிரதமர் மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து இது எப்படி நடந்தது என்று விளக்கம் அளிப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மாநகராட்சியின் கட்டிடத் துறையில் நிர்வாகப் பொறியாளர் பணிமாற்றத்திற்கு ரூ. 1.25 கோடி லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ், இத்தகைய ஊழல்களே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என்றார்.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.