

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, "ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியா பதிவு செய்துள்ள 7.8 சதவீத GDP வளர்ச்சி விகிதம், மேற்காசிய போர் மற்றும் உலகளாவிய வர்த்தக பாதிப்புகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
இந்தியா வளர்வது மட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது
முன்பு இந்தியாவை மிகவும் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்று என்ற நிலைக்கு தள்ளியவர்களால், இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதை சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.
தொடர்ந்து 2013 தான் பேசிய 'பாதி கிளாஸ்" உதாரணத்தை நினைவுகூர்ந்த அவர், "சிலர் ஒரு கிளாஸைப் பாதி நிரம்பியுள்ளதாகவும், சிலர் பாதி காலியாக உள்ளதாகவும் பார்க்கின்றனர். ஆனால் நான் அந்த கிளாஸ் பாதி நீராலும் பாதி காற்றாலும் முழுமையாக நிரம்பியுள்ளதாக கருதுகிறேன்.
2013இல் நாட்டின் நிலைமையை எதிர்மறையாகப் பார்த்தவர்கள் இன்றும் அதே கண்ணோட்டத்திலேயே நாட்டைக் காண்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, அந்த கிளாஸ் எப்போதும் பாதி காலியாகவே இருக்கும். நான் கிளாஸைப் பற்றிப் பேசுகிறேன் வேறெதுவும் காலியாக இருப்பது குறித்துப் பேசவில்லை." என்றார்
தொடர்ந்து பேசிய அவர், " நான் எனது ரிப்போர்ட் கார்டுடன் உங்கள் முன் வந்துள்ளேன். உண்மையின் கர்ஜனைக்கு முன்னால் பொய்களின் எதிரொலி நிற்க முடியாது.
2013இல் நான் மேக் இன் இந்தியா குறித்துப் பேசியபோது பலர் அதைக் கேலி செய்தனர். இன்று அதன் பிராண்ட் மதிப்பை உலகம் காண்கிறது.
2014இல் பெரும்பாலான செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று ரூ. 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கைப்பேசிகளையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாகவும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாகவும் உருவெடுத்து வருகிறது" என்றார்.