அக்வான் புயல் மேற்கு வங்க மாநிலத்திலும் கோரத்தாண்டவம் ஆடியது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்தது.
அக்வான் புயல் இன்று அதிகாலை மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் வலுவிழந்து புயலாக மாறியது. இது வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரையோரத்தில் உள்ள கோபால்பூர் அருகே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா மாவட்டங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் பல்வேறு இடங்களில் புயல் மழை பெய்தது.
விசாகப்பட்டினம் புயலில் இருந்து தப்பியது ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம்பேட்டை பகுதியில் புயல் கரையை கடக்க தொடங்கியதால் கடலில் உயரமான அலைகள் எழுந்து சீற்றமாக காணப்பட்டது.
அங்குள்ள மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் மழை காரணமாக வட ஆந்திரவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. 13 கடலோர மண்டலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் மழை கோரத்தாண்டவம் ஆடியது. அங்கு பல்வேறு இடங்களில் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன. தொடர்ந்து 3 முதல் 6 மணி நேரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஒடிசா மாவட்டங்களில் புயல் மழை பெய்தது. அங்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பல்வேறு இடங் களில் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
கடலோரப் பகுதிகளில் இருந்து 1 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 69 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் பஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கோபால்பூர் மற்றும் புரி கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவசரத் தேவைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல் மேற்கு வங்க மாநிலத்திலும் கோரத்தாண்டவம் ஆடியது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. சுந்தர்பன்ஸின் கடலோரப் பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.
ஆறுகளிலும் கடலிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கடற்கரையோரம் சீற்றமான வானிலை நிலவியது.
மோசமடைந்து வரும் வானிலையைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பக்காளி மற்றும் கங்காசாகர் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆந்திராவை விட ஒடிசாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.