இந்தியா

பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை: போலி ஆதாரைப் பயன்படுத்தி குழந்தையை விற்ற அத்தை உள்பட 8 பேர் கைது!

சிறுமி கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் மனிதநேயமற்ற, நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16 வயதுடைய பெற்ற மகளையே சொந்தத் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கட்டாய கருக்கலைப்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்ற தாய், தந்தையை விட்டுப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூத்த மகளான இந்த சிறுமியைத் தந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி முதன்முறையாகக் கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.

மீண்டும் கர்ப்பம் அடைந்த சிறுமி

அதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால், அச்சிறுமி மீண்டும் 2025-இல் கர்ப்பமடைந்தார். இம்முறை இக்குற்றத்தை மறைப்பதற்காக, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலருடன் இணைந்து தந்தை சதித்திட்டம் தீட்டினார். சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய் சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

குழந்தை விற்பனை

இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியோடு அக்குழந்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர்.

அத்தை உள்பட 8 பேர் கைது

சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலமாகத் தன் தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது விவரித்துள்ளார். உடனடியாகத் தாய் அளித்த புகாரின் பேரில், நியூ ராஜேந்திர நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்க உதவிய செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உட்பட 8 பேரை காவல்துறையினர் போக்சோ, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.