

மும்பை பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவசர விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுவன் சிறுமியை உள்ளூர் சால் பகுதிக்கு வரவழைத்துள்ளான்.
சிறுமி அங்கே சென்றபோது, அந்தச் சிறுவனும் அவனது 17 வயது நண்பனும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், சிறுமியின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக இரு சிறுவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் இதுபற்றித் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி சிறுமியின் தாய்மாமன் இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்த, அச்சிறுமி பாதிக்கப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பால்கர் காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.