இந்தியா

வட மாநிலங்களில் ஊரடங்கு பீதியால் பெட்ரோல் பங்கில் குவிந்த பொதுமக்கள்

உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

புதுடெல்லி:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதேபோல் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரானும் போர் தொடுத்துள்ளது. இந்த போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் கியாஸ் நிறுவனங்களில் குவிந்துள்ளனர். பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வட மாநிலங்களில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் காரணமாக கொரோனா காலத்தில் போடப்பட்டது போல ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்து தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி வருகிறார்கள்.

மேலும் கடைகளிலும் பொருட்கள் வாங்க குவிந்துள்ளனர். இதனால் அங்கும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு மறுத்துள்ளது. ஊரடங்கு என்பது வெறும் வதந்திதான். அதை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று கூறியுள்ளது.