பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
Published on

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கடந்த 2-ந்தேதி முதல் தனது கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலர்களை தாண்டி தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. சாதாரண பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 3-ம் உயர்த்து வதாக நேற்று அறிவித்தது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருந்தன. அவைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று காலை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீது கலால் வரி ரூ.10 ஆக இருந்த நிலையில் அது முழுமையாக ரத்து செய்யப்பட்டு பூஜ்யம் என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி போர் தொடங்கிய பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்த போதிலும் இந்தியாவில் சில்லறை பெட்ரோல்-டீசல் விலைகள் மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கேட்டு கொண்டதையடுத்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விலையை உயர்த்தவில்லை.

ஆனால் நயாரா நிறுவனம் விலையை அதிகரித்ததை தொடர்ந்து மற்ற எண்ணெய் நிறுவனங்களும் விலையை ஏற்றலாம் என்று தகவல் வெளியானது.

இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கிலும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரை பாதுகாக்கவும் இந்த கலால் வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து உள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதை சமாளிக்க எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு இந்த வரி குறைப்பு உதவும்.

இந்த கலால் வரி குறைப்பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை குறையாது. அதேவேளையில் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் எரிபொருள் விற்பனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 60 நாட்களுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது. மேலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் பயணம் மேற்கொள்ள அனுமதியை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com