கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியைச் சேர்ந்த 20 பா.ஜ.க கவுன்சிலர்கள் மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் வடக்கஞ்சேரி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோர் பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழி செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக இன்னும் நான்கு வாரங்களுக்குள் மீண்டும் புதியதாகப் பதவியேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள நகராட்சி சட்டம் 1994 மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 'கடவுளின் பெயரால்' அல்லது 'உளமாற' மட்டுமே பிரமாணமும் உறுதிமொழியும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து, கடவுள் என்ற வார்த்தையை நீட்டிப்பதோ அல்லது வேறு பெயர்களைப் பயன்படுத்துவதோ சட்டப்படி அனுமதிக்கப்படாது என்று நீதியரசர் பி.வி.குன்ஹிகிருஷ்ணன் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த பதவியேற்பு விழாவின் போது, பா.ஜ.க கவுன்சிலர்கள் ஸ்ரீ பத்மநாபசுவாமி, குருதேவா, உதயனூர் தேவி, காவிலம்மா போன்ற குறிப்பிட்ட இந்து தெய்வங்களின் பெயர்களாலும், 'பாரத மாதா', 'பாரதாம்பா' மற்றும் தங்களின் அரசியல் இயக்கத்தின் தியாகிகள் பெயராலும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதேபோல், காங்கிரஸ் உறுப்பினர் சுனில் சுவட்டுபாடம் என்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரால் பிரமாணம் செய்திருந்தார். இதனை எதிர்த்து இடதுசாரி கவுன்சிலர் எஸ்.பி.தீபக் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்பிற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் உட்பட்டு மக்களுக்கு உண்மையாக உழைப்பேன் என்று உறுதியளிப்பதே இந்த பிரமாணத்தின் நோக்கம் என்பதால், சட்ட விதிகளில் உள்ள வடிவத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இந்தத் தவறான உறுதிமொழியின் காரணமாக அவர்களின் கவுன்சிலர் பதவி பறிபோகாது என்றும், மக்கள் தீர்ப்பே மகத்தானது என்பதால் அவர்களுக்கு மீண்டும் சட்டப்படி பதவியேற்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார்.
அதுவரை அவர்கள் கவுன்சிலர்களாக எந்தவொரு அதிகாரப்பூர்வ பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஆனால் திருவனந்தபுரம் கவுன்சிலர்கள் இதுவரை மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் நகராட்சி சட்டப் பிரிவு 531-ன் கீழ் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.