இந்தியா

'நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல': 2027 உ.பி. தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ்- சமாஜ்வாதி இடையே மோதல்

சகாரன்பூரில் காங்கிரஸ் கோரிய இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணிக்குள் முரண்பாட்டை அதிகரித்துள்ளது.

இம்ரான் மசூதின் கருத்துக்குப் பதிலளித்த சமாஜ்வாதி எம்.பி.ஷிவ்பால் சிங் படேல், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்குப் பெரிய தேர்தல் பலம் இல்லை என்றும், கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணி தோழமைக் கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே காரசார வார்த்தை போர் வெடித்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் முன்பே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்ததற்கு காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வழங்கும் சலுகைகளுக்காகக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் நாங்கள் அல்ல என்றும், தொகுதிகளைக் கேட்காத நிலையில் அவராக அறிவித்திருப்பதால் அது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கேள்வி

இம்ரான் மசூதின் கருத்துக்குப் பதிலளித்த சமாஜ்வாதி எம்.பி.ஷிவ்பால் சிங் படேல், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்குப் பெரிய தேர்தல் பலம் இல்லை என்றும், கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சகாரன்பூரில் இரண்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டதில் என்ன பிரச்சனை இருக்க முடியும் என்றும், கூட்டணியின் ஒரு பகுதியாக மற்ற தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022 சட்டப்பேரவைத் தேர்தலில் லலித்பூர் தொகுதியில் சமாஜ்வாதி சுமார் 70,000 வாக்குகளும், காங்கிரஸ் சுமார் 3,000 வாக்குகளும் பெற்றதைச் சுட்டிக்காட்டிய சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா, சமமான தொகுதிப் பங்கீட்டுக்கான காங்கிரஸின் கோரிக்கையின் அடிப்படையைக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் சமாஜ்வாதியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் நீடிப்பது கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் தயாரிப்பு நேரத்தைக் குறைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

120 தொகுதிகள் கோரிக்கை

வரவிருக்கும் தேர்தலில் 120 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதிகள் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகாரன்பூரில் காங்கிரஸ் கோரிய இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணிக்குள் முரண்பாட்டை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை மட்டுமே என்றும், ஒவ்வொரு தொகுதியின் சாதக-பாதகங்கள், மக்கள்தொகை மற்றும் சாத்தியமான வேட்பாளர்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. தனுஜ் புனியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதல் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியபோது காங்கிரஸுக்கு 26 தொகுதிகள் வழங்கும் முன்மொழிவை அகிலேஷ் யாதவ் அறிவித்து, அதை "வெற்றிகரமான தொடக்கம்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், காங்கிரஸ் 120 தொகுதிகள் கோருவதால் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளியை எவ்வாறு குறைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இந்தப் பங்கீடு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதையே காட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

SCROLL FOR NEXT