சீனா ரோபோ
இந்தியா

சீனாவின் ரோபா ராணுவம்: எச்சரித்த காங்கிரஸ்- ராகுல் காந்தியை சுட்டிக்காட்டி பதில் கொடுத்த பா.ஜ.க.

சீனாவில் நடைபெற்ற போட்டியில் மனித ரோபோ ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் சாதனையை முறியடித்தது.

உசைன் போல்ட் சாதனையை 100மீ ஓட்டப் பந்தயத்தில் ரோபோ முறியடித்துள்ள நிலையில், சீனா தன் ராணுவத்தில் ரோபோவை இணைக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் ரோபாக்களுக்கான சர்வதேச போட்டியை நடத்தியது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சீனாவின் மனித ரோபா, உசைன் போல்ட் சாதனையை முறியடித்தது.

இந்த நிலையில் மனித ரோபாவை சீனா ராணுவத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா கவனமாக இல்லாவிட்டால், மிக விரைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ஒரு ரோபோ சீன ராணுவத்தில் (PLA) போரிட நேரிடலாம். வளர்ந்து வரும் வல்லரசு என்ற ஆரவாரங்கள் இருந்தபோதிலும், தொழில்நுட்பப் போட்டியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் உண்மையில் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை சீனாவின் பிரமிக்க வைக்கும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி நமக்கு ஒரு யதார்த்தமான பாடத்தைக் கற்பிக்கக் கூடும். மேலும் இது அதன் வகைகளில் ஒன்று மட்டுமே.

75 கிரிட்டிக்கல் டெக்னாலாஜியில் 67-ல் அமெரிக்காவை விட சீனா முன்னோக்கி உள்ளது.

இவ்வாறு மணிஷ் திவாரி பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளிக்கும் வகையில் கூறுகையில் "முதலாவதாக, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். டோக்லாம் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​சீனக் கூடாரங்களுக்குள் காணப்பட்டவர்கள் அவர்கள்தான்.

சீனர்கள் நமது ராணுவத்தை அடித்து வீழ்த்திவிட்டார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். அவர் ஒரு சீன ரோபோ. அவரது மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.

இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.