

சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ போட்டிகளில், மனித உருவ ரோபோ ஒன்று 100 மீட்டர் தூரத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளது.
மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டிகள்
பெய்ஜிங்க் நகரில் இரண்டாவது மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த ரோபோ போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த 2,056 மனித உருவ ரோபோக்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.
பெய்ஜிங்கின் தேசிய வேகப் பனிச்சறுக்கு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம், தொழிற்பயிற்சிப் போட்டிகள் என 51 நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
ஹியூமனாய்டு ரோபோட் இன்னோவேஷன் அமைப்பால் உருவாக்கப்பட்ட தியாங்காங் அல்ட்ரா (Tiangong Ultra) என்ற மனித உருவ ரோபோ நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டது.
இந்த ரோபோவிற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹானர் உருவாக்கிய லைட்னிங் என்ற மனித உருவ ரோபோ கலந்துகொண்டது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அட்ரா ரோபோ 100 மீட்டர் தூரத்தை 9.39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது. ஹானர் நிறுவனத்தின் லைட்னிங் ரோபோ, 9.47 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதன்மூலம் ஜெர்மனியில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள போட்டியில், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட்டின் 9.58 வினாடி என்ற உலக சாதனையை, இரண்டு ரோபோக்களும் முறியடித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உருவ ரோபோ போட்டியில், அல்ட்ரா ரோபோ 100 மீட்டர் தூரத்தை 21.50 வினாடிகளில் கடந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது 12 வினாடிகள் வேகவாக ஓடி புதிய சாதனையை அல்ட்ரா என்ற மனித உருவ ரோபோ படைத்துள்ளது.
இந்த மனித உருவ ரோபோவின் சாதனை குறித்து சீன ஊடகம் வெளியிட்ட செய்தியில், முன்னதாக நடந்த சோதனை ஓட்டத்தின் (trial run) போது அது 9.32 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததாகவும், வினாடிக்கு 14.5 மீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அரை மாரத்தானின் போது அந்த ரோபோ 169 செ.மீ உயரமும், 95 செ.மீ நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்ததாகவும், விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் அதன் கால்களை மேலும் 10 செ.மீ நீளமாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.