மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், அதில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தனியாக செயல்பட முடிவு எடுத்துள்ளனர். அதேபோன்று எம்.பி.க்களிடமும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சில எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கட்சி பிளவுப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாரால் கைப்பற்றப்பட்டது. சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அஜித் பவார் மறைவுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் இணையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அஜித் பவார் மனைவி துணை முதல்வரானதும் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதற்கிடையே சிவசேனா (உத்தவ் தாக்கரே -UBT) எம்.பி. சஞ்சய் ராவத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியமாக உருவானது திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ். பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று கட்சியை உருவாக்க இந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். சரத் பவார் இதற்கு தலைமை தாங்கி சிறிய கட்சிகளை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முன்னெடுப்பை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் ‘‘காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்டார்கள். அப்படி யாராவது ஏறினாலும், நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படி நடந்தாலும், அது பாஜகவுக்கு கூடுதல் அரசியல் களத்தை கொடுப்பதாக இருக்கும்.” என்றார்.