ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம் 2026-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இதன்மூலம் அமராவதி நகருக்கு ஆந்திராவின் அதிகாரப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமான தலைநகர் என்ற அந்தஸ்து நிரந்தரமாகக் கிடைத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்றுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
இது ஆந்திர மக்களின் நீண்ட கால கனவு மற்றும் அபிலாஷையின் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவும், வழிகாட்டுதலும் வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும், மத்திய அரசிற்கும் ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த வெற்றி குறிப்பாக அமராவதி பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமானது. தலைநகர் உருவாக்கத்திற்காகத் தங்களது வாழ்வாதாரமான நிலங்களைத் தியாகம் செய்து, எத்தனையோ சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும் தளராத உறுதியுடன் நின்ற அந்த விவசாயிகளின் விடாமுயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது. அவர்களின் தியாகத்தை இந்த மாநிலம் என்றும் மறக்காது.
அமராவதி என்பது வெறும் நகரமல்ல, அது ஆந்திராவின் அடையாளம். இனி வரும் காலங்களில் உலகத்தரம் வாய்ந்த தலைநகராக அமராவதியை உருவாக்குவதே எங்களின் இலக்கு என பதிவிட்டுள்ளார்.