இந்தியா

ஜந்தர் மந்தரில் தலைமை காவலர் உயிரிழக்கவில்லை! வைரல் பதிவுகளுக்கு காவல் துறை விளக்கம்

போராட்டக்களத்தில் பெண் தலைமை காவல் உயிரிழந்ததாக கூறும் சமூக வலைதள பதிவு வேகமாக பரவியது.

ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெண் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறும் சமூக வலைதள பதிவு ஒன்றை டெல்லி காவல்துறை போலியானது என்று அறிவித்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடும் போராட்டம்:

மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் பெண் தலைமை காவல் உயிரிழந்ததாக கூறும் சமூக வலைதள பதிவு வேகமாக பரவியது.

காவல் துறை விளக்கம்:

இந்த நிலையில், அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவு தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் தெரிவித்தது.

இத்தகைய பொய்யான தகவல்களை உருவாக்குவோர், பரப்புவோர் அல்லது மேலும் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டது.

பணிநீக்கம்:

முன்னதாக, "நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது," என ஏ.என்.ஐ. தெரிவித்தது.

நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.