பெங்களூருவை சேர்ந்த 26 வயதான பிசியோதெரபிஸ்ட் சாய் சுரபி. இவர், சிக்கபல்லாபூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணியாற்ற சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.
சுரபி அங்கு வந்திருப்பதை அறிந்த அவரது காதலனான கேரளாவைச் சேர்ந்த முகமது சஞ்சீத் அலி, அங்கு சென்று தனியார் ஹோம்ஸ்டே விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
விடுதிப் பதிவேடுகளின்படி, இருவரும் கடந்த மூன்று நாட்களாக அந்த அறையில் ஒன்றாக தங்கியிருந்துள்ளனர்.
வெளியான அதிர்ச்சி தகவல்..
திங்கட்கிழமை மதியம், அவர்கள் அறையை காலி செய்ய வேண்டிய நேரம் கடந்தும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுரபி சடலமாகக் கிடந்துள்ளார். சஞ்சீத் அலி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
அறையிலிருந்து ஒரு கயிறு, ஏராளமான மருத்துவ மாத்திரைகள், வாந்தி எடுத்ததற்கான தடயங்கள், மது பாட்டில்கள், ஒரு தலையணை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
எனினும், சுரபியின் உடலில் வெளிப்புறக் காயங்களோ ரத்தக் காயங்களோ எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் சுமத்தும் கடுமையான குற்றச்சாட்டுகள்..
சுரபியும், சஞ்சீத் அலியும் சில காலங்களாக காதலித்து வருகின்றனர். இதற்கு சுரபி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போனதாகவும், போலீசார் அவர்களை மீட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, பார்ட்டி ஒன்றில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு, சுரபியை மீட்ட குடும்பத்தினர், மைசூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து 6 மாதங்கள் சிகிச்சை அளித்து, போதை பழக்கத்திலிருந்து மீட்டு பெங்களூருவிற்கு அழைத்து வந்துள்ளனர்.
சுரபியின் மரணத்திற்கு சஞ்சீத் அலி தான் காரணம் என்றும், சுரபியை அவர் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியதாகவும், அடிக்கடி அவர் சுரபியை அடித்து துன்புறுத்திதாகவும் சுரபியின் குடும்பத்தினர் சஞ்சீத் அலி மீது குற்றசாட்டுகளை வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணை மற்றும் தற்போதைய நிலை..
இச்சம்பவம் குறித்து சிக்கபல்லாபூர் எஸ்பி கூறுகையில், "சுரபியின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. எனவே இது கொலையா, தற்கொலையா, விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை அறிய பிரேதப் பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்" தெரிவித்தார்.
மயக்க நிலையில் இருக்கும் சஞ்சீத் அலி நினைவு திரும்பியவுடன், அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.