'பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்' திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகையை பெறுவதற்கு, ஆதார் அங்கீகாரம் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இருப்பினும், ஆதார் அங்கீகாரம் செய்ய தவறியதாலோ அல்லது ஆதார் எண் இல்லாததாலோ எந்தவொரு குழந்தையும் இந்த உதவியை பெறுவதில் இருந்து தடுக்கப்பட மாட்டார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், சமூக நீதி அமைச்சகம், 'பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்' திட்டத்தின் கீழ் உள்ள சிறப்பு கல்வி உதவி தொகை திட்டத்தின் பயனாளிகள் ஆதார் அங்கீகாரத்தை செய்ய வேண்டும் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
"இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்பும் நபர், ஆதார் அங்கீகாரத்தை செய்ய வேண்டும் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்" என்று அந்த அறிவிக்கை கூறுகிறது.
இருப்பினும், அந்த அறிவிக்கையின் 4-வது பத்தியில், "ஆதார் அங்கீகாரம் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய குழந்தைகளுக்கோ, ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கோ, அல்லது ஆதார் எண்ணைப் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தும் இன்னும் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கோ, இந்த திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பலன்கள் மறுக்கப்படாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழல்களில், அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், குழந்தையின் அடையாளத்தையும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலருடனான உறவையும் சரிபார்த்த பிறகு, அந்த பலன்கள் வழங்கப்படும்.
ஆதார் எண் இன்னும் ஒதுக்கப்படாத பயனாளிகள், ஆதார் பதிவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
இதுவரை ஆதார் பதிவு செய்யாத பயனாளிகள் பதிவு செய்வதையும், அவர்களின் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதையும் அந்தந்த துறை உறுதி செய்யும்.