நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் 8.23 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன.
தரவுகளின்படி, நாடு முழுவதும் வெவ்வேறு துறைகளை சேர்த்து மத்திய அரசின் கீழ் 39 லட்சத்து 23 ஆயிரத்து 212 உள்ளன. ஆனால் மார்ச் 1, 2024 நிலவரப்படி 30 லட்சத்துக்கு 99 ஆயிரத்து 556 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதன் மூலம் 8 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 656 பணியிடங்கள், அதாவது சுமார் 21 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய துறையான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ வீரர்கள் அல்லாத சிவிலியன் பணியிடங்களில் 5,56,248 இடங்களில் 2,42,243 இடங்கள் (43.5%) காலியாக உள்ளன.
அதேபோல, இந்திய ரெயில்வேயில் 14,79,701 பணியிடங்களில் 2,40,125 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
இது நாட்டின் மொத்த காலியிடங்களில் 30 சதவீதமாகும். பாதுகாப்பு மற்றும் ரெயில்வே ஆகிய இவ்விரு துறைகளில் மட்டுமே 4.82 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தில், 11,18,233 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 1,10,885 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பாதுகாப்புத் துறை, ரெயில்வே மற்றும் உள்துறை ஆகிய மூன்றிலும் மட்டுமே சேர்த்து 5.93 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
வருவாய்த் துறையில் 1,79,374 இடங்களில் 69,662 இடங்கள் (38.8 சதவீதம் ) காலியாக உள்ளன. அஞ்சல் துறையில் 2,53,124 இடங்களில் 61,546 இடங்கள் (24.3 சதவீதம்) காலியாக உள்ளன.
அணுசக்தித் துறையில் 37,250 இடங்களில் 10,234 இடங்கள் (27.47 சதவீதம்) காலியாக உள்ளன. விண்வெளித் துறையான இஸ்ரோவில் 19,200 இடங்களில் 4,126 இடங்கள் (21.48 சதவீதம்) காலியாக உள்ளன.
இதுபோல வெவ்வேறு துறைகளுக்கான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் கூறுகையில், "வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், இத்தனை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலையளிக்கிறது.
அரசு வேலை என்பது இளைஞர்களின் உரிமை. மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அரசுத் துறைகளின் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.