

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’ என்ற மாணவர் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.
இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.
கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.
இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.
நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.
அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.
சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.
பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.
முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.
எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.
தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.
நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.