இந்தியா

இந்தியாவில் மேலும் 7 புல்லட் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மும்பை-அகமதாபாத் வழித்தடம் இல்லாமல், 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுமானத்தில் இருக்கும் மும்பை–அகமதாபாத் வழித்தடத்தை தவிர்த்து மேலும் 7 புல்லட் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட திட்டத்தின் வழித்தடங்கள், டெல்லி, வாரணாசி, புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கின்றன.

மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி மற்றும் வாரணாசி-சிலிகுரி ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். விரைவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்புகள், நிலம் கையகப்படுத்தல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மும்பைக்கும் புனேவுக்கும் இடையேயான பயணநேரம் 48 நிமிடங்களாவும், பெங்களூருவுக்கும் சென்னைக்கும் இடையே 73 நிமிடங்கள் ஆகவும், பெங்களூருவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே 2 மணி 10 நிமிடங்கள்,

புனேவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே 2 மணி 8 நிமிடங்கள், டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே 2 மணி நேரம், டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே 3 மணி நேரம் 15 நிமிடங்கள் மற்றும் டெல்லிக்கும் சிலிகுரிக்கும் இடையே 6 மணிநேரமாகவும் குறையும் என அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.