இந்தியா

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு அவசர மனு

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு மற்றும் அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிபிஐ முதற்கட்ட வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் சண்டிகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சிறப்பு பணி அலுவலரான ராஜ்பீர் சிங் குமான் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான ஊழல் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் பணி இடமாற்றம், புதிய நியமனங்கள், அரசின் கொள்கை முடிவுகள், டெண்டர் நடைமுறைகள், உரிமங்கள் வழங்குதல் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

எட்டு இடங்களில் தொடர் சோதனைகள்

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு மற்றும் அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிபிஐ முதற்கட்ட வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, சண்டிகரில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகம் உட்பட சண்டிகர், மொகாலி, குர்தாஸ்பூர், லூதியானா, பாட்டியாலா, சங்க்ரூர் மற்றும் ஜலந்தர் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முக்கிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவந்த் மான் குற்றச்சாட்டு

இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வரவிருக்கும் 2027 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை மனதிற்கொண்டு பாஜக தனது தேர்தல் பிரசாரப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டதாக விமர்சித்துள்ளார். மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தித் தனது தலைமையிலான ஆம் ஆத்மி அரசைக் குறிவைத்து அச்சுறுத்த முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக தரப்பு, இந்த நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெறுகிறது என்றும், இதில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

பஞ்சாப் அரசு அவசர வழக்கு

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இச்சம்பவம் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பெரும் பரபரப்பை நீடிக்கச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT