மேற்கு வங்காள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 3 குடும்பத்தினரை தாக்கி, மதத்தை கைவிடுமாறு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. பெண்களின் ஆடைகளை கிழித்து அவமதித்ததுடன், துர்கா பூஜை சடங்குகளில் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், பஸ்சிம் மேதினிபூர் மாவட்டம், பட்லாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.அப்பகுதியைச் சேர்ந்த 3 கிறிஸ்தவ குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தொடர்ந்து மிரட்டல்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி மொண்டல் என்ற பெண் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த அக்டோபர் 18-ந்தேதி பிற்பகல் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் உள்ளே புகுந்து என்னை தாக்கியது. தாக்குதலில் மயக்கமடைந்த நான், பின்னர் ஓரளவு நினைவு திரும்பியபோது, எனது சேலை உருவப்படுவதையும் ரவிக்கை கிழிக்கப்படுவதையும் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
என் மீது தண்ணீரை ஊற்றி, மத சடங்கு என்ற பெயரில் அவமதித்தனர். வீட்டில் வைத்திருந்த பைபிளையும் எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பாவிட்டால் என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தினரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு சிறுமியின் கழுத்தை நெரித்ததாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து, அக்டோபர் 19-ந்தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக துர்கா பூஜை பந்தலுக்கு அழைத்துச் சென்று, பூஜையில் பங்கேற்க கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அக்டோபர் 20-ந்தேதியும் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக சந்திரகோனா காவல் நிலையத்தில் இந்துதுவா குழுவுடன் தொடர்புடைய 13 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஸ்சிம் மேதினிபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாபியா சுல்தானா கூறுகையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அக்டோபர் 21-ந்தேதி நிலவரப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மதச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், பிரார்த்தனை செய்பவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் பைபிள்களைக் கிழித்தல் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.