மோடி 
இந்தியா

BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி

மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமாக பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

2026 ஜனவரி 1 அன்று இந்தியா 4வது முறையாகப் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஈரான் அதிபர் பெசஸ்கியானும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்.

பிரதமர் மோடி

இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,"அடுத்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூடவுள்ளனர்.

உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்த உச்சி மாநாடு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களைக் காணும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ்

கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவன பொருளாதார நிபுணர் ஜிம் ஓநீல், 2001ல் "BRIC" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.

2006ல் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பின், 2009ல் ரஷியாவின் யெகாடெரின்பர்க்கில் முதலாவது உச்சி மாநாடு நடைபெற்றது.

2010ல் அழைப்பு விடுக்கப்பட்டு, 2011ல் தென்னாப்பிரிக்கா இணைந்தவுடன் 'BRIC' என்பது 'BRICS' ஆக மாறியது.

2024 இல் எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன. 2025இல் இந்தோனேசியா 11வது முழு உறுப்பு நாடாக இணைந்தது.

மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பெலாரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக சேர்க்கப்பட்டன.

வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும்.

SCROLL FOR NEXT