ப.சிதம்பரம் - சசி தரூர்  
இந்தியா

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு

சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் விரைவில் வர உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.

ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்களும் வருகை தர உள்ளனர்.

இந்த மாநாட்டிற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

இம்மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரத்தின் கேள்வி

கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்கப் பலன்களும் கிடைக்கவில்லை எனப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளது.

சசி தரூரின் நிலப்பாடு

ப. சிதம்பரம் கேள்வியை தொடர்ந்து சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய GDPயில் மார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எனவே பிரிக்ஸ் அமைப்பு Global South எனப்படும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பல நாட்டுத் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரகப் பலத்தைக் காட்டுகிறது என்றும், இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டிற்குப் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பேசிய அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 நாடுகளும் வெவ்வேறு தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், அனைத்து உலகளாவிய விவகாரங்களிலும் பொதுவான ஒரு முடிவை எட்டுவது சவாலானது.

சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையிலான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய தரூர், இந்த உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துச் சீரான முடிவை எடுப்பது இந்தியத் தூதர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT