பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வந்த தகவலால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மும்பையின் பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில், நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டை வெடிகுண்டு மூலம் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்த மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்கும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
அமிதாப் பச்சனின் மும்பை வீட்டுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மிரட்டல் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது வீடுகளில் எதனை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது முதற்கட்ட தகவல்களில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார்? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மிரட்டலை தொடர்ந்து அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லத்தின் வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.