

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பயந்தர் ரெயில் நிலையம் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனை தொடர்ந்து, அந்த இடங்களில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சோதனையில் அங்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மிரட்டல் மின்னஞ்சல், மீரா-பயந்தர், வசாய்-விரார் (MBVV) காவல் தலைமையகத்திற்கு வந்ததாக அவர்கள் கூறினர்.
"Vaishali Rumde 9802" என்ற பயனர் பெயரில் வந்த அந்த மின்னஞ்சலில், விராரை சேர்ந்த 72 வயது உஜ்வாலா சாவர்க்கர் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தனது மனைவி கொலை செய்யப்பட்டதாக கூறும் நபர் ஒருவர், அந்த சம்பவத்திற்கு உஜ்வாலா சாவர்க்கர் மற்றும் மற்றொரு பெண்ணே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மும்பையின் புறநகர் பகுதியான பயந்தர் ரெயில் நிலையம் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தில் காவல்துறை உடனடியாக பாதுகாப்பு சோதனைகளை தொடங்கியது. மோப்ப நாய் படைகளை கொண்டு அந்த இடங்கள் முழுமையாக சோதிக்கப்பட்டன.
காவல்துறையினர் உஜ்வாலா சாவர்க்கரை் கண்டறிந்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் இந்த மின்னஞ்சலை அனுப்பினாரா அல்லது யாராவது அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தான் தனது கைபேசியை தொலைத்துவிட்டதாக அந்த பெண் விசாரணையின்போது தெரிவித்தார்.
சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் வெறும் புரளி என்று காவல்துறை அறிவித்தது.
தற்போது, இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பின்னணி மற்றும் அடையாளம் குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், கொலை குற்றச்சாட்டு தொடர்பான தகவலின் உண்மைத்தன்மை மற்றும் இந்த மிரட்டலுக்கு பின்னால் உள்ள நோக்கம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.