அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை கங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கடுமையாக சாடினார்.
இது பாஜக கூட்டணியால் அரங்கேற்றப்பட்ட ஒரு மோசடி என்றும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முற்றிலும் மெளனம் காப்பதாகவும் காங்கிரஸ் கூறியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், “திருட்டு நடந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ்-இன் அறிக்கை இழிவானது மற்றும் வெட்கக்கேடானது. இவர்கள், மிகவும் இழிவான முறையில் பிடிபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் மெளனம் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பு, 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோவிலை கட்டிமுடித்து திறந்து வைத்ததாக பெருமை பேசிக்கொண்ட பிரதமர், அதன் பிறகு அயோத்தியை இழந்த நிலையில், ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
அவர்கள் முற்றிலும் மெளனமாக இருக்கிறார்கள். பாஜகவின் வியூகம் மும்முனை கொண்டது, வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு மற்றும் சில்லறை திருட்டு.
தேர்தல் பத்திர திட்டத்தை நினைவில் கொள்ளுங்கள், அது உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான கோடிகள வசூலிக்கப்பட்டன.
நன்கொடை கொடுங்கள், வியாபாரம் பெறுங்கள்(சந்தா தோ, தண்டா லோ) இந்தவகையான நன்கொடை வியாபாரம் முழுவதுமே பாஜக டிஎன்ஏ-வின் ஒரு பகுதிதான்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.