இந்தியா

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் பாஜ.க.

மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.

"பஞ்சாப் மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது, அதை நனவாக்க பா.ஜ.க.வும் முழுமையாக தயாராக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்கும்," என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அவர் மேற்கொண்ட இரண்டு நாள் அமைப்பு பயணத்தின் முதல் நாளில், பாட்டியாலாவில் நடைபெற்ற முதல் மண்டலக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

நேற்று காலை மொஹாலி விமான நிலையத்தில் பி.எல். சந்தோஷை, மாநில பா.ஜ.க. தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லன் மற்றும் பஞ்சாப் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் வரவேற்றனர்.

தேர்தல் ஆயத்த பணிகள்:

தனது பயணத்தின் போது சந்தோஷ், பஞ்சாபின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அமைப்பு பொறுப்பாளர்களுடன் மண்டல கூட்டங்கள் நடத்தி, அமைப்பின் செயல்பாடுகளையும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் ஆய்வு செய்வார்.

இந்தக் கூட்டங்கள், வாக்குச்சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் கொள்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பஞ்சாப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தும்.

நேற்று சந்தோஷ் பாட்டியாலா மற்றும் பதிண்டாவில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்று (ஆகஸ்ட் 25), லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் மண்டல கூட்டங்கள் நடைபெறும்கின்றன. மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.

வெற்றி பெற முடியாது:

"பா.ஜ.க. தனித்து போட்டியிட்டாலும் சரி, யாருடனாவது கூட்டணி அமைத்தாலும் சரி, பஞ்சாபில் அதனால் வெற்றி பெற முடியாது," என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.

"மார்ச் 2022-க்கு முன்பு, எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தனர். அந்த ஐந்து வாக்குறுதிகளையும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருக்கிறோம்.

எனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது. இது ஒரு நேரடி போட்டி, மேலும் 2022-ல் நாங்கள் அடைந்த செயல்திறனை விட சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.