சத் பூஜையின் போது யமுனை நதியில் நச்சு நுரை பொங்கும் நீரில் பெண்கள் வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
சத் விழா என்பது பிகாரிலும் ஜார்க்கண்டிலும் உத்தரப்பிரதேச பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். மேலும் டெல்லியின் யமுனை நதிப் படித்துறைகளில் பாரம்பரியமாக சத் கொண்டாட்டமானது நடைப்பெறுகிறது.
அந்த வகையில் டெல்லியின் யமுனை நதிப் படித்துறைகளில் சாத் பூஜையின் போது நச்சு நுரை மிதப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது
இது குறித்து காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதாக நரேந்திர மோடியும் பாஜக அரசும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. யமுனை நதியின் தற்போதைய புகைப்படங்களே அரசின் பொய்களுக்குச் சாட்சி என விமர்சித்துள்ளது.
சத் பண்டிகையின் போது பெண்கள் நச்சுத்தன்மை கொண்ட நுரை நீரில் இறங்கி வழிபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் யமுனை நதிக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்றால், சத் பூஜையின் போது, பெண்கள் நச்சுத்தன்மை கொண்ட, நுரை பொங்கும் நீரில் இறங்கி வழிபாடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது .
பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக பாஜக அரசு பெரும் பாவத்தைச் செய்துவிட்டதாகக் கூறியுள்ள காங்கிரஸ், இதற்காக யமுனை அன்னையும் சத்தி மையாவும் நரேந்திர மோடியையும் பாஜகவையும் மன்னிக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளது